சின்ன வெங்காயத்தின் விலை மார்ச் மாதம் குறையும்

கோவை, ஜன. 24: சின்ன வெங்காயத்தின் விலை வரும் மார்ச் மாதம் குறையும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சின்ன வெங்காயம் தென்னிந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் மொத்த வெங்காய பரப்பளவில் 80 சதவீதத்திற்கும் மேல் சின்ன வெங்காயமும் மீதம் பெல்லாரி வெங்காயமும் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தை அதிகளவு பயிரிடுகின்றனர். வர்த்தக மூலங்களின்படி கர்நாடக மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பருவமழை மற்றும் அதனைத்தொடர்ந்து பயிர் செயலிழப்பால் வெங்காயத்தின் வரத்து தமிழக சந்தையில் குறைந்துள்ளது. நடப்பாண்டின் பயிர் அறுவடை மற்றும் கர்நாடக வரத்து ஆகியவை வரும் மார்ச் மாதத்தில் வெங்காயத்தின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம், கடந்த 12 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், வரும் மார்ச் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் இருந்து வரும் வரத்தை பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும்.

Related Stories: