கோவை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர்

கோவை, ஜன. 24:  மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., படிக்க நீட் நுழைவு தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இத்தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பதால், மாநில பாடத்திட்ட மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், நடப்பாண்டில் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கோவை மாவட்டத்தில் 15 இடங்களில் நீட் தேர்வு பயிற்சி நடந்தது. மொத்தம் 27 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், தேர்வுகளை காரணம் காட்டி நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தி கொள்ள கல்வித்துறை அறிவறுத்தியுள்ளது. அதன்படி, தற்போது இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் மே மாதம் நீட் தேர்வு நடக்கிறது.

Advertising
Advertising

இந்த தேர்வு எழுத  ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது. இதில், கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 262 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கவுள்ளதால் இலவச நீட் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு முடிந்ததும் மீண்டும் பயிற்சி துவங்கும். நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் பள்ளிகளிலேயே மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் பலர் விண்ணப்பித்தனர். மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 262 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்” என்றார்.

Related Stories: