கருத்தடை மையம் முடக்கம் தெரு நாய்களால் விபத்து அபாயம்

கோவை, ஜன.24: கோவையில் நாய்கள் கருத்தடை மைய முடக்கத்தால் நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. சாலைகளில் திரியும் நாய்களால் விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
Advertising
Advertising

கோவையில் ரத்தினபுரி, சிவானந்தா காலனி, ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரத்தில் படுத்திருக்கும் நாய்கள் திடீரென ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு சாலைகளில் பாய்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதேபோல் கோவையில் இருந்து போத்தனூர் வழியாக பொள்ளாச்சி,  மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு  ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர் அங்கிருந்து சொந்த வேலை விஷயமாகவும், வேலைக்கும் அங்கிருந்து கோவை நகருக்குள் வருகின்றனர்.

குறிப்பாக போத்தனூர்-செட்டிபாளையம்  செல்லும் சாலை மிகவும் குறுகலான இருவழிப்பாதையாக உள்ளது. சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் குறுக்கும், நெடுக்குமாக இரவு  நேரங்களில் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. முக்கியமாக போத்தனூர் ஈஸ்வர் நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் நடந்து செல்பவர்களை விரட்டி கடிப்பது, பைக்கில் செல்பவர்களை துரத்துவதும் நடக்கிறது. சாலைகளின் நடுவே நாய்கள் ஓடுவதால் இருசக்கர வாகன  ஓட்டிகள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து சாலைகளில் பயணம் செய்ய  வேண்டியிருக்கிறது. இது குறித்து ஈஸ்வர்நகரை சேர்ந்த  தனியார் நிறுவன ஊழியர் சத்தியபிரகாஷ் என்பவர் கூறுகையில், ‘‘நான் தினமும்  பைக்கில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று  வருகிறேன். இரவு 8 மணிக்கு மேல் வீடு திரும்புவது வழக்கம்.

போத்தனூர்,  ஈஸ்வர் நகர், வடிவுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருநாய்கள் சாலைகளில் அதிகளவில் சுற்றி  திரிகின்றன. இதனால் பலர் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே இங்கு  சுற்றி திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்வதன் மூலம் நாய்களின்  பெருக்கத்தை வருங்காலங்களில் கட்டுப்படுத்த முடியும். எனவே வாகன ஓட்டிகளின் விபத்தில் சிக்குவதை தடுக்க மாநகராட்சி  நிர்வாகத்தினர் இந்த தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் விட வேண்டும்’’  என்றார். இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘கோவை  நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்களின் தொல்லை மிக அதிகளவில் உள்ளது.  நாய் சாலையின் குறுக்கே பாய்வதால் அடிக்கடி விபத்தில் சிக்கி பலர் காயமடையும் மற்றும்  உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது. கோவை மாநகராட்சி  சார்பில் செயல்படும் நாய்கள் கருத்தடை மையம் முறையாக செயல்படுவதில்லை.  மேலும் இந்த கருத்தடை மையத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளாக  நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கருத்தடை மைய முடக்கத்தால்  கோவையில் தெருநாய்கள் பெருக்கம் அதிகமாகி உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம்  இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

Related Stories: