மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கோவையில் கள ஆய்வு

கோவை, ஜன. 24: ‘‘கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூலம் கள ஆய்வு நடந்து வருகிறது,’’ என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது: குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடைத் திட்டங்கள், மழைநீர் வடிகால்கள், பூங்காக்கள் என அனைத்து வசதிகளிலும் கோவை மாநகராட்சி தன்னிறைவு பெற்று 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பெற்ற மாநகராட்சியாக திகழ்ந்து வருகிறது.
Advertising
Advertising

சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூலம்   மெட்ரோ ரயில் திட்டம் கள ஆய்வு நடந்து வருகிறது. ரூ.1500 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலங்குளம் உள்ளிட்ட 8 குளங்களில் மேம்பாட்டு பணிகளையும், பூங்காக்கள், சாலைகள் போன்ற பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகின்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாநகரப்பகுதிகளுக்கு தடையில்லா குடிநீர் வழங்குவதற்கான திட்டப்பணிகளையும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளையும், புதிய குடிநீர் இணைப்புகளையும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதுபோலவே பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும், மழைநீர் வடிகால் பணிகளையும் மக்களுக்கு பயன்தரும் வகையில் விரைந்து முடித்திட வேண்டும். பொள்ளாச்சி முதல் ஈச்சனாரி வரை ரூ.414.90 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி 90 சதவிகிதம் முடிந்துள்ளது.

ரூ.320 கோடியில் மேற்கு புறவழிச்சாலை, ரூ.215 கோடியில் ஆத்துப்பாலம் - உக்கடம் வரை மேம்பாலம், ரூ.194 கோடியில் காந்திபுரம் இரண்டாம் அடுக்கு மேம்பாலம், உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை சுமார் 9 கி.மீ. நீளமுள்ள அவினாசி சாலையில் உயர்மட்டபாலம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிக்கு மண்பரிசோதனை செய்யப்பட்டு பாலத்திற்கான வடிவமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இம்மேம்பாலப்பணிகள் விரைவில் துவக்கப்படும். கோவை திருச்சி பிரதான சாலையில் ஸ்டாக் எக்சேஞ்சிலிருந்து ரெயின்போ வரை 3.15 கி.மீ. நீளத்திலான மேம்பாலம், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை 1 கி.மீ. நீளத்திலான உயர்மட்ட மேம்பாலம் என சுமார் ரூ.2000 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளும், உயர்மட்டப்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றது. இப்பணிகளை அலுவலர்கள் விரைந்து செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டங்களனைத்தும் செயல்பாட்டிற்கு வரும்போது தமிழகத்திலேயே கோவை மாநகரானது போக்குவரத்து நெரிசலற்ற பகுதியாக விளங்கும். மேலும் ரூ.168 கோடியில் வெள்ளலூரில் 50 ஏக்கரில் தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய நிதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன், மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: