கோவை அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவ படிப்பு எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு

கோவை, ஜன. 24: கோவை அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவ மேற்படிப்பு துவங்குவது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலையில் குழந்தைகள் நலப்பிரிவு, நரம்பியல் பிரிவு, எம்.டி., பொது மருத்துவ படிப்புகள் வழங்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் எம்.டி உளவியல் துறைக்கு 3 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக இதய அறுவைசிகிச்சை துறையில் எம்.சி.எச்., படிப்பு துவங்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு நான்கு இடங்கள் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் புதிய படிப்பு துவங்குவது தொடர்பாக நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனைக்கு ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, அறுவைசிகிச்சை வசதி, உபகரணங்கள், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினர். இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், ‘‘இதய அறுவைசிகிச்சை மேற்படிப்பிற்கு 4 இடங்களுக்கு  விண்ணப்பித்து இருந்தோம். இது தொடர்பாக எம்.சி.ஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவ இடங்கள் வழங்கப்படும்.  வரும் கல்வியாண்டில் இதய அறுவைசிகிச்சையில் எம்.சி.எச்.., புதிய படிப்பு துவங்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

Related Stories: