இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வரை சைக்கிள் பயணம்

கோபி, ஜன.24: இயற்கை வேளாண்மை அவசியத்தை வலியறுத்தி தருமபுரி மாவட்டத்தில் இருந்து கோவை மேட்டுப்பாளையம் வரை மாணவர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளுக்கு நாள் உணவு பொருட்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக மாறி வருகிறது. இதனால், உணவு உற்பத்திக்காக அதிகளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால் மண்ணின் தன்மை பாதிப்பதுடன் நிலத்தடி நீர் மாசு, சுற்றுச்சூழல் மாசு என அனைத்து உயிர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், இயற்கை வேளாண்மை குறித்து மாணவ பருவத்திலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப் பள்ளியில் 85 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் பெற்றோர், வெளியூர்களில் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் இந்த தனியார் பள்ளியில் இலவச கல்வி அளித்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் சிறிது நிலம் வழங்கி அதில் இயற்கை விவசாய முறையை கற்று கொடுத்து வருகின்றனர்.இப் பள்ளியில் படிக்கும் 15 மாணவர்களுடன் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று கோபி வந்தனர். புதுக்கரைபுதூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் அருணாசலம் என்ற விவசாயி தோட்டத்தில் இயற்கை முறை விவசாயம் குறித்து நேரடியாக அறிந்தனர்.இயற்கை முறை விவசாயத்தின் அவசியம் குறித்தும்,  ரசாயன உரங்களின் பாதிப்பு குறித்தும் மாணவ, மாணவிகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: