பெரியார் குறித்து அவதூறு கருத்து ரஜினிகாந்துக்கு தா.மு.க. கண்டனம்

கோபி, ஜன.24: தந்தை பெரியார் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் மாநிலத் தலைவர் தேவராஜன், பொதுச்செயலாளர் முருகேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது வரை நடிகராகவே உள்ள ரஜினிகாந்த், நாடாளும் கனவில் தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்து பேசுவதை தவிர்க்க வேண்டும். பகுத்தறிவு கொள்கைகள், சீர்திருத்த சித்தாந்தங்கள், அரசியல் அடிச்சுவடி கூட தெரியாத ரஜினிகாந்த், பெரியாரை விமர்சிக்க தகுதி இல்லை. பெரியார் குறித்து அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டவர்களே விமர்சிக்க தயங்கிய நிலையில், பா.ஜ.வின் பினாமி குரலாக ரஜினிகாந்த், பெரியாரை விமர்சித்து உள்ளார். இதுபோன்ற தலைவர்களை விமர்சிக்கும் முன் யோசித்து பேச வேண்டும். தான் பேசிய கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை. தான் பேசிய கருத்து தவறு என உணர்ந்து மனம் திருந்தினால்போதும். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

ரஜினிகாந்த் மீது எஸ்பியிடம் மனு: ஆதிதமிழர் பேரவையின் ஈரோடு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்து தரக்குறைவாக பேசி அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். எனவே, ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு  கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 30ம் தேதி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Related Stories: