அந்தியூர் ஒழுங்குமுறை கூடத்தில் ஜன.28 முதல் பருத்தி ஏலம்

ஈரோடு, ஜன.24:ஈரோடு மாவட்ட விற்பனை குழுவின் மூலம் இயங்கி வரும் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள், மக்காச்சோளம், துவரை உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது பருத்தி அறுவடை நடந்து வருவதால் வரும் 28ம் தேதி முதல் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு விற்பனைக்குழு வேளாண்மை துணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் 28ம் தேதி பருத்தி மறைமுக ஏல விற்பனை தொடங்க உள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை தோறும் பருத்தி ஏல விற்பனை நடைபெறும். இந்த ஏலத்தில் உள்ளூர், வெளி மாவட்ட வியாபாரிகள், அரவை ஆலை, நூற்பாலை உரிமையாளர்கள் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்யலாம். ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள், நன்கு முதிர்ந்து மலர்ந்து வெடித்த பருத்தியை அதிகாலை நேரத்தில் பறித்து நிழலில் உலர்த்தி, தூசி, சருகுகளை நீக்கி ரகம் வாரியாக தனித்தனியாக பிரித்து விற்பனை கூடத்துக்கு எடுத்து வரவேண்டும்.

Related Stories: