26ம் தேதி குடியரசு தினத்தன்று 404 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

திருச்சி, ஜன.24: திருச்சி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று 404 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கிராம ஊராட்சிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்திற்கொண்டு தமிழக அரசு நிர்வாகத்தில் இருந்த நடைமுறை சிக்கல்களை விலக்கி ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக தேவையான நிதி ஒதுக்கீடும் அரசினால் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், குழுக்களுக்கு ஒத்துழைப்பு, கழிப்பறை இல்லாதோர் விவரப் பட்டியல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள், திட்டக்கழிவு மேலாண்மைத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதிசெய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. குடியரசு தினமான 26ம் தேதி அன்று காலை 11 மணிக்கு திருச்சி மாவட்டத்திலுள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து பெருமக்களும் கலந்துகொண்டு ஊராட்சிகள் கிராமசபை நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு பின், தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து புதிய தலைவர்கள், கவுன்சிலர்கள் தேர்வாகி பொறுப்பேற்று உள்ளனர். எனவே இந்த கிராம சபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags : councils ,Republic Day ,
× RELATED மாநகராட்சி, நகராட்சி,...