புதிய தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்பதால் முக்கியத்துவம் புதிய கட்டிடம் திறந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் திருச்சி கலெக்டர் அலுவலக சுவரில் பல இடங்களில் விரிசல் கழிவறைகளும் சுத்தமின்றி துர்நாற்றம் வீசும் அவலம்

திருச்சி, ஜன.24: திருச்சி புதிய கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விரிசல்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி கலெக்டர் அலுவலக வளாகம் மிளகுபாறை பகுதியில் உள்ளது. இந்த வளாகத்தின் பின்புறம் பழைய கட்டிடத்தில் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின்னர் சாலையின் முன்பகுதியில் கடந்த 2010ம் ஆண்டுவாக்கில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி திருச்சி புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார். கலெக்டர் அலுவலகம் கட்டி முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அங்கு சரிவர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற புகார் பரவலாக இருந்து வந்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக கட்டிடத்தின் உள் பகுதிகளில் பல இடங்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு காணப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு அலுவலகத்தின் சுவரில் கீழிருந்து மேலே ஒரே நேர்கோடாக மிகப்பெரிய விரிசல் காணப்படுகிறது. இந்த விரிசல் சாதாரண ‘கிராக்’ என்று எடுத்துக்கொண்டாலும், முழுமையாக அந்த விரிசல் அடுத்த சுவர் வரை பயணிக்கிறது. அந்த அறையையே துண்டாக காட்டும் அளவுக்கு விரிசலின் தன்மை உள்ளது. இதுதவிர இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் தரையில் உள்ள டைல்ஸ் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அதில் நடந்து செல்பவர்கள் தடுக்கி கீழே விழும் நிலையும் அவ்வப்போது நிகழ்வது தொடர்கதையாக உள்ளது.

இதுதவிர கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் பெரும்பாலும் முறையாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. தரைத்தளத்தில் பிஆர்ஓ அலுவலகத்தையொட்டி உள்ள கழிவறைக்குள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, அந்த பகுதியை பொதுமக்கள், அலுவலர்கள் உள்பட யாரும் கடக்க முடியாத அளவுக்கு உள்ளது. மேலும் வளாக சுவர்களில் ஆங்காங்கே ஒட்டடை பிடித்து நூலாம்படை தொங்குகிறது. ஏராளமான மக்கள், பல்வேறு அதிகாரிகள், பொதுநல அமைப்புகள், அரசியல்வாதிகள், நிறுவனத்தார் வந்து செல்லும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டாமா? என்பதே அனைத்து தரப்பினரின் கேள்வியாக உள்ளது. எனவே, கலெக்டர் அலுவலகத்தை முறையாக பராமரித்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்துவது ஒரு புறம் இருக்க, கலெக்டர் அலுவலகம் பார்வைக்கு வெளித்தோற்றத்தில் கம்பீரமாக காட்சியளித்தால் மட்டும் போதாது, அலுவலகத்தின் உள்பகுதியும் சுத்தமாகவும், சிதிலங்களின்றி முறையாக பராமரிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலக ஊழியர்களே முணுமுணுக்கத் துவங்கி உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யும் கலெக்டர் சிவராசு, கலெக்டர் அலுவலகத்தையும் ஆய்வு செய்து, சீரமைக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் தரையில் உள்ள டைல்ஸ் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அதில் நடந்து செல்பவர்கள் தடுக்கி கீழே விழும் நிலையும் அவ்வப்போது நிகழ்வது தொடர்கதையாக உள்ளது.

Tags : leaders ,opening ,councilors ,building ,places ,collector ,
× RELATED ரசாயனம் இல்லாத வேளாண்மைக்கு...