தொட்டியம் அருகே இளம்பெண் மர்மச்சாவு கணவரிடம் விசாரணை

தொட்டியம், ஜன.24: தொட்டியம் அருகே எம்.புத்தூர் கிராமத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்ததால் போலீசார் கணவனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொட்டியம் அருகே எம்.புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளி சதீஷ்குமார்(23) என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மனைவி திலகவதி(21) என்பவருடன் உறவினர் வீட்டில் குடியேறி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திலகவதியின் உறவினர்கள் திலகவதியை பார்க்க வந்துள்ளனர். வீடு காலையிலிருந்து திறக்கப்படாமல் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியதையடுத்து உறவினர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது திலகவதி படுத்திருப்பதை கண்டுள்ளனர். இதையடுத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் சடலமாக திலகவதி கிடந்துள்ளார். மேலும் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் திலகவதியின் கழுத்தில் இருந்துள்ளது.

இதையடுத்து உறவினர்கள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் திலகவதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திலகவதியின் இறப்பு குறித்து கணவன் சதீஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கழுத்து நெறித்த இறந்த நிலையில் திலகவதியை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சென்றது யார்? கணவன் சதீஷ் அப்போது எங்கிருந்தார், இச்சம்பவத்தில் சதீஷ்க்கு தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் திருமணமான 6 மாதத்தில் திலகவதி இறந்ததால் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என முசிறி சப்-கலெக்டரும் தனி விசாரணையை துவக்கியுள்ளார். இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Investigation ,teenager ,
× RELATED தாய்க்கு திதி கொடுக்க ஏமாற்றி...