குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு வாலிபர் சங்கத்தினர், மாணவர்கள் அமைப்பினர் பேரணி, ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன. 24: திருச்சியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர்கள் அமைப்பினர் நேற்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் யாரேனும் சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால் அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும். இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தை புறக்கணிப்பதாக கூறி அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் திருச்சியில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு இயக்க மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகில் இருந்து புறப்பட்ட பேரணி கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர செயலாளர் லெனின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர தலைவர் சுரேஷ், மாநில செயலாளர் பாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாநில செயலாளர் பாலா கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.

Tags :
× RELATED தெப்பத்திருவிழா 27ல் துவக்கம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்