×

தஞ்சை-திருவாரூர் ரயில் பாதையில் 31ம் தேதி அதிவேக சோதனை ஓட்டம்

திருவாரூர், ஜன.24: தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வரையிலான ரயில் பாதையில் மின்மயம் பணிகள் முடிவுற்றதையடுத்து வரும் 31ம் தேதி பாதுகாப்பு ஆணையிரின் அதிவேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெறுகிறது.
இந்திய ரயில்வேயில் கடந்த காலங்களில் நிலக்கரியை கொண்டு ரயில் இன்ஜின்கள் இயக்கப்பட்ட நிலையில் பின்னர் அந்த இன்ஜின்கள் அனைத்தும் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செலவு மற்றும் பயண நேரத்தை குறைப்பதற்காகவும், இழுவை திறனை அதிகரிப்பதற்காகவும் தற்போது நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயம் ஆக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி தென்னக ரயில்வேயில் ஏற்கனவே சென்னையில் இருந்து விழுப்புரம் வரையில் மின்மயம் இருந்து வரும் நிலையில் விழுப்புரத்தில் இருந்து கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் வரையிலும், இதேபோல் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சை வரையிலும் என 286 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.330 கோடி மதிப்பில் மின்மயம் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருச்சியிலிருந்து தஞ்சை திருவாரூர் வழியாக காரைக்கால் வரையிலான ரயில் பாதையிலும் இந்த மின்மயம் பணிகள் ரூ.250 கோடி மதிப்பில் நடைபெற்றன. அதன்படி ஏற்கனவே திருச்சியிலிருந்து தஞ்சை வரையில் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அதன்பின்னர் தஞ்சையில் இருந்து திருவாரூர் வரையில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மின்மய பணிகள் தற்போது முடிவுற்றுள்ளதையடுத்து இதற்கான சோதனை ஓட்டம் என்பது கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தின் போது ஒருசில குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து அந்த குறைபாடுகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த மின் பாதையில் ரயில் ஓட்டம் துவங்க வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே ரயில் இயக்க முடியும் என்பதால் இந்த ரயில் பாதையில் வரும் 31ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ரயில் ஓட்டம் நடைபெறுவதாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு பின்னர் குறைபாடுகள் இருப்பின் அவைகள் சரி செய்யப்பட்டு அதன் பின்னர் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு பின்னர் படிப்படியாக பயணிகள் ரயில் விடப்படும் என கூறப்படுகிறது.

பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டு கோள் :
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் பாஸ்கரன் கூறுகையில், இந்த சோதனை ரயில் ஓட்டம் என்பது 31ம் தேதி காலை எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பின்னர் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சோதனை ஓட்டம் குறைந்தபட்சம் 120 கிலோ மீட்டருக்கு மேல் வேகம் இருக்கும் என்பதால் தஞ்சையிலிருந்து திருவாரூர் வரையிலான ரயில் பாதையில் தண்டவாளத்தை கடக்கும் போது பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த மின் பாதையில் இருந்து வரும் மின் கம்பங்கள் மற்றும் இரும்பு தட்டிகள் மற்றும் ஓயர்பாக்ஸ்கள் போன்றவற்றினை பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags : Tanjore-Thiruvarur ,
× RELATED மின்மய பணிகள் முடிவு: தஞ்சை -திருவாரூர் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்