×

ஜனவரி 26ம் தேதி கிராம சபைகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜன. 24: ஜனவரி 26 அன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிடக் கோரி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டு மென பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பேரழிப்புக்கு எதிரான பேரியக்க நிறுவன தலைவர் லெனின் விடுத்துள்ள அறிக்கை: வரும் ஜனவரி 26-குடியரசு தினத்தில் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. கிராமசபைகள் மிக உயர்ந்த அதிகாரம் படைத்த அமைப்பு ஆகும். மத்திய, மாநில அரசுகள் கூட இவற்றின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என பஞ்சாயத்து ராஜ் சட்டம் சொல்கிறது. இந்த அதிகாரத்தை மக்கள் சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
கிராமசபை கூட்டங்களில் அரசு அதிகாரிகள் தலையிடக் கூடாது. பார்வையாளர் களாகவே பங்கேற்க வேண்டும். மக்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. கடந்த காலங்களில் செய்ததுபோல அரசு அலுவலர்கள் கிராமசபை கூட்டங்களில் எடுக்கும் முடிவுகளை மாற்றம் செய்ய முயற்சிக்கக் கூடாது. மக்கள் கருத்துக்களும், கூட்ட முடிவுகளும் கூட்ட பதிவேட்டில் நேரடியாக மக்கள் முன் எழுதப்பட வேண்டும். முடிவுகள் மக்கள் முன் படித்துக் காண்பிக்கப்பட வேண்டும். கூட்ட நடப்புகளை ஒலி, ஒளி பதிவு செய்வது நல்லது.

இக்கூட்டங்களில் வாக்குரிமை உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்னைகள் மீது தீர்மானங்களை மக்கள் முன் மொழிய வேண்டும். அவை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். கூட்டப் பதிவேட்டை முறையாக எழுதி கூட்டத்தில் பங்கேற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டும். இறுதியாக கூட்ட தலைவர் கையெழுத்திட வேண்டும். இவையனைத்தும் கூட்டம் நடைபெறும் இடத்திலேயே முடிக்கப் பட வேண்டும். விவாதப் பட்டியலில் கூட்டத்தில் பங்கேற்போர் முன் வைக்கும் பொது விடயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக காவிரிப் படுகையை மட்டுமல்லாமல், தமிழகத்தின் உணவுக்கும், குடிநீருக்கும் சவால் விடுகின்ற ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கைவிடக் கோரும் தீர்மானங்களை வரும் கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்ற வேண்டும். அதேபோல ஏனைய வாழ்வாதாரங்களை அழிக்கவல்ல திட்டங்களை கைவிடக் கோரும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கான செயல்பாடுகளில் அனைவரும் ஈடுபட வேண்டும்.

Tags : Village Councils ,
× RELATED ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில்...