×

புதிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மழைநீர் கட்டமைப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பில் அதிகம் ஈடுபட வேண்டும்

திருவாரூர், ஜன.24: திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது ஊராட்சிகளில் மழைநீர் கட்டமைப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று 2வது நாளாக திருவாரூரில் கொரடாச்சேரி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய 5 ஒன்றியங்களுக்கு நடைபெற்றது. இதில் பயிற்சி முகாமினை துவக்கி வைத்து கலெக்டர் ஆனந்த் பேசுகையில், கிராம ஊராட்சிகளில் நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதற்காக இந்த பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. இதில் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வது, அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது, நிதி வருவாய் மற்றும் செலவினம் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைத்தவிர ஊராட்சி நிர்வாகம் குறித்து 5 நாள் பயிற்சி வகு ப்பு விரைவில் அளிக்கப்பட உள்ளது.

மத்திய, மாநில அரசின் திட்டங்கள் கிராம அளவில் சென்றடைவதற்கு ஊராட்சி அமைப்பு முக்கிய பங்கினை வகிப்பதால் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இதற்கேற்ப தங்களது பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகளின் வீடு வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை, தனிநபர் கழிவறைகள் போன்றவை தகுதியுடைய பயனாளிகளுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத்தவிர தங்களது ஊராட்சி பகுதிகளில் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது கடமைகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி முகாமில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் கலியபெருமாள் மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம், மாவட்ட ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : council leaders ,
× RELATED கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம்...