சேலத்தில் அறிமுக பயிற்சிக்கூட்டம் சிறந்த ஊராட்சிகளாக மாற்றும் வகையில் தலைவர்கள் பணியாற்ற வேண்டும்

சேலம், ஜன.24: சிறந்த ஊராட்சிகளாக மாற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் பணியாற்ற வேண்டும் என அறிமுக பயிற்சிக்கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசினார். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான ஒருநாள் அறிமுக பயிற்சி கூட்டம், சேலம் பெரியார் பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பேசியதாவது:

Advertising
Advertising

சேலம் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கு 2 பிரிவாக அறிமுக பயிற்சி, அதிகாரிகளால் அளிக்கப்படுகிறது. முதல்நாளில், பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு ஆகிய 5 ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். தற்போது, மீதியுள்ள 15 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில், அதிகாரிகள் பல்வேறு பொருட்கள் பற்றி எடுத்துரைக்கவுள்ளனர். குறிப்பாக, பஞ்சாயத்துராஜ் அறிமுகம், 73-வது சட்ட திருத்தம், அரசியலமைப்பு மற்றும் கிராம ஊராட்சிகளின் பணியமைப்பு, கூட்டங்கள் நடத்துவது, சொத்துக்கள், ஊராட்சிகளின் மின்னனு நிர்வாகம், நிதி மேலாண்மை அமைப்பு முறை, கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், டெண்டர், வரவு மற்றும் செலவு, நிர்வாகப்பணிகள், வளர்ச்சி திட்டம் தயாரித்தல் போன்றவை பற்றி கூறுவார்கள். அதனை விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

ஊரக பகுதிகளின் முழுமையான வளர்ச்சிக்கு, உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மிக முக்கியமானது என்பது குறித்தும், கிராம ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், கிராம சபைக்கூட்டம், கிராம ஊராட்சி கூட்டங்கள், பணிகள் அனுமதித்தல், பணிகள் செயல்விளக்கம், செலவினங்கள்மேற்கொள்வதற்கான நடைமுறைகள், மின்னணு பண பரிவர்த்தனைகள் பற்றி எடுத்துரைக்கின்றோம். அதனால், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் இப்பயிற்சியில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்து, சேவை மனப்பான்மையோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தை செம்மையாக நடத்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள், மக்களின் எண்ணங்களையும், கோரிக்கைகளையும் கனிவோடு பரிசீலித்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக மாற்றிட திறம்பட பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் ராமன் பேசினார். இதில், மகளிர் திட்ட இயக்குநர் செல்வக்குமார், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் கோபிநாத், ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: