வாழப்பாடி அருகே பரிதாபம் போதையில் கிணற்றில் விழுந்து 2 பேர் பலி

வாழப்பாடி, ஜன.24: வாழப்பாடி  அருகே மது குடித்த இரண்டு பேர் போதையில் கிணற்றில் தவறி விழுந்து  பலியாகினர். இதுகுறித்து கருமந்துறை போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே  கல்வராயன்மலைப்பகுதியில் உள்ள கருமந்துறை பெரஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்  வெள்ளையன் (60). விவசாயி. இவரும் அதேபகுதியை சேர்ந்த உறவினர் மணி (45)  என்பவரும் நேற்று முன்தினம் இரவு மது குடிக்க சென்றுள்ளனர். அப்போது, மது பாட்டில்களை  வாங்கி வந்து, வெள்ளையனுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின்  அருகில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். மது அருந்திவிட்டு  வீட்டிற்கு செல்லும் போது, இருவரும் நிலைதடுமாறிய படி நடந்து சென்றனர்.  அப்போது வெள்ளையன் அங்கிருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார்.

Advertising
Advertising

இதனை  பார்த்த மணி அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, அவரும் கிணற்றுக்குள்  விழுந்தார். இரவு நேரம் என்பதால் அவர்கள் கிணற்றில் விழுந்தது யாருக்கும்  தெரியவில்லை. இருவரும் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த  குடும்பத்தினர் அக்கம், பக்கம் தேடினர். ஆனால் அவர்களை குறித்து எவ்வித  தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, நேற்று அதிகாலை தோட்டத்திற்கு  சென்றவர்கள், கிணற்றில் இரண்டு பேரின் சடலங்கள் மிதப்பதை பார்த்து  அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

இதனை  பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் வீட்டிற்கு கொண்டு சென்று  இறுதி சடங்கு செய்த பின்பு அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கருமந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த 2பேரின் சடலங்களையும் கைப்பற்றி, சேலம் அரசு  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் 2பேர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: