வரத்து சரிந்ததால் தேங்காய் விலை அதிகரிப்பு

சேலம், ஜன.24: தமிழகத்தில் விளைச்சல் சரிந்த காரணத்தால், தேங்காய் டன்னுக்கு ₹5 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அரச்சலூர், காங்கேயம், பெருந்துறை, குன்றத்தூர், கவுண்டம்பாடி, அவினாசி, மாரண்டஹள்ளி, காவேரிப்பட்டணம், பாலப்பாடி உள்ளிட்ட இடங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இதைதவிர கேரளா மாநிலங்களில் தென்னை மரங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு போதிய மழை இல்லாததால், தென்னை மரங்களில் காய்ப்பு குறைந்தது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரவேண்டிய வரத்து இருந்து 30 சதவீதம் சரிந்தது. இதனால் கடந்த சில மாதமாக தேங்காய் விலை உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஓரளவுக்கு மழை கைக்கொடுத்துள்ளது. இதன் பலன் நடப்பாண்டு இறுதியில் தான் கிடைக்கும். தேங்காய் விலை குறைய சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

இது குறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் கேரளாவில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக மூன்று மாதமாக தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. கடந்த நவம்பரில் ஒரு டன் தேங்காய் ₹28 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டது. வரத்து சரிந்த காரணத்தால் நாளுக்கு நாள் விலை அதிகரித்து, நேற்று நிலவரப்படி டன்னுக்கு ₹5 ஆயிரம் அதிகரித்து, ₹33 ஆயிரம் முதல் ₹35 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை உயர்வால் சில்லரையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. சில்லரையில் ₹8க்கு விற்ற தேங்காய் ₹10 எனவும், ₹12க்கு தேங்காய் ₹16 எனவும், ₹20க்கு விற்றது ₹25 எனவும் விற்பனை செயயப்படுகிறது. நடப்பாண்டு இறுதியில் தேங்காய் வரத்து அதிகமாக இருக்கும். எனவே இன்னும் சில மாதத்திற்கு தேங்காய் விலை தற்போது விற்கும் விலையில் தான் விற்கப்படும். தேங்காய் வரத்து அதிகரிக்கும்போது விலை குறையும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: