×

உதவி ஆணையர் முன்னிலையில் நடந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி

பள்ளிபாளையம்,  ஜன.24: விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் தொடர்பாக, நேற்று சேலம் தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்தது.
பள்ளிபாளையம் விசைத்தறி  தொழிலாளர்கள், தீபாவளி போனஸ் கேட்டு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து  கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விசைத்தறி  தொழிலாளர்களுக்கு 9 சதவீதம் போனஸ் வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முன்  வந்தனர். ஆனால், கடந்தாண்டு வழங்கப்பட்ட போனஸ் சதவீதத்தை விட, அரை சதவீதம்  குறைந்ததால் தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை. இருந்த போதிலும் ஜவுளி  உற்பத்தியாளர்கள், தங்கள் தரப்பின் நெருக்கடியை தெரிவித்து போனஸ் தொகையினை  அறிவித்தனர். தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், போனஸ் பிரச்னை தொடர்பாக,  சேலம் தொழிலாளர் நல அலுவலகத்தில், தொழிற்சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு தொடர்பாக, சேலம் தொழிலாளர் நல உதவி ஆணையர் சங்கீதா விசாரணை  நடத்தினார். வழக்கு விசாரணைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வராமல் புறக்கணித்து வந்தனர்.  இதையடுத்து, வரும் பிப்ரவரி 7ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த  போராட்டத்திற்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர்.

இந்நிலையில்  நேற்று, சேலம் தொழிலாளர் நல அலுவலகத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில்,  ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கந்தசாமி, நிர்வாகிகள் சண்முகம்,  நந்தகுமார், யோகராஜ், சீனிவாசன், சந்திரன் உள்ளிட்டோர் ஆஜராகினர். தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், அசன், சண்முகம் உள்ளிட்டோர் ஆஜராகினர். இருதரப்பினரும்  தங்கள் தரப்பில் உள்ள நெருக்கடிகளை தெரிவித்தனர். தீபாவளி போனஸ் தொகையில்,  தொழிற்சங்கத்தினர் கடந்தாண்டு தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.  இதனால் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து பிப்ரவரி 18ம்தேதி நடைபெறும் அடுத்த  விசாரணையில், இருதரப்பினரும் பங்கேற்க வேண்டுமென உதவி ஆணையளர்  உத்தரவிட்டுள்ளார்.

Tags : Bonus negotiations ,power workers ,Assistant Commissioner ,
× RELATED ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத...