உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம் நிர்வாக அதிகாரம் அறிந்து செயல்பட வேண்டும்

கிருஷ்ணகிரி, ஜன.24:  உள்ளாட்சிக்கான நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள் மற்றும் சட்டத்திட்டங்கள் குறித்து அறிந்து செயல்பட வேண்டுமென, தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சி, கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. இந்த பயிற்சியை, கலெக்டர் பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி இணை இயக்குநர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) ஹரிஹரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சி நடத்தப்படுகிறது. அரசியலமைப்பு ஆணைகளை, உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிந்து கொண்டு நிர்வாக அதிகாரம் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள், சட்டத்திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் வினியோகம், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், சுகாதார பணிகள் போன்ற கிராமத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, அனைத்து அலுவலர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை பெற்று, ஊராட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்த வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், முதன்மை பயிற்றுனர்கள் ரங்கநாதன், அச்சுதன், உதவித் திட்ட அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊராட்சி செயலாளர் சாந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, உமா மகேஸ்வரி, வேடியப்பன், சிவக்குமார், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : representatives ,training camp ,
× RELATED அவிநாசியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுவிழா