ஊத்தங்கரையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் சிக்கினார்

ஊத்தங்கரை, ஜன.24:  ஊத்தங்கரை தர்மராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் தசரதன். ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி பழனியம்மாள்(54).  இவர், கடந்த மாதம் 23ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர், மீண்டும் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதேபோல், ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சேர்ந்த சம்ருத்(60) என்பவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம் 28ம் தேதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 3 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஊத்தங்கரை அடுத்த வேடப்பட்டியைச் சேர்ந்தவர் சிங்காரம்(32). சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் இவர், கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்த 3 பவுன் நகையை சொந்த தேவைக்காக அடகு வைக்க கொண்டு சென்றார். அப்போது, இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் டூவீலரில் பின்தொடர்ந்து சென்று, நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.  இதனிடையே, இந்த 3 கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய ஆசாமி போலீஸ் பிடியில் சிக்கி உள்ளான். அங்குள்ள ஒரு கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிந்துள்ளது. அதனை வைத்து கொள்ளையனை போலீசார் பிடித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : robbery ,
× RELATED பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு