×

பர்கூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த 3 புள்ளி மான்கள்

கிருஷ்ணகிரி, ஜன.24:  பர்கூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான்களில் இரண்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்ட நிலையில், ஒரு மான் பரிதாபமாக இறந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம்,  பர்கூர் அருகே ஜெயின்கொல்லை பகுதியைச் சேர்ந்த விவசாயி  தேவேந்திரன்(60). இவரது விவசாய நிலத்தில், 65 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. அதில் தற்போது 5 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலத்தின் அருகே, பூமலை காடு, நேரலக்கோட்டை காப்புக்காடு மற்றும் ஒப்பதவாடி வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. நேற்று முன்தினம் அதிகாலை, தண்ணீர் தேடி பூமலை காட்டில் இருந்து 3 புள்ளிமான்கள் விவசாய நிலத்திற்கு புகுந்தன. அதனை கண்டதும் அங்கிருந்த தெருநாய்கள் துரத்தியுள்ளது.

இதில், தறிகெட்டு ஓடிய மான்கள், கிணற்றுக்குள் தவறி விழுந்தன.  இந்நிலையில் நேற்று காலை, கிணற்றில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்ட தேவேந்திரன், கிணற்றை எட்டி பார்த்த போது, உள்ளே மான்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து உடனடியாக பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், நிலைய அலுவலர்(பொ) மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சற்குணம், அன்பு, ராஜ்குமார், பிரதாப், விவேகானந்தன் உள்ளிட்டோர் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி, 3 மான்களை கயிறு கட்டி மீட்டனர். ஆனால், ஒரு மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட 2 மான்களையும், வனத்துறையினர் காப்பு காட்டில் விட்டனர்.

Tags : Barkur ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு