×

திறப்புவிழா கண்ட சில நாட்களிலேயே மூடப்பட்ட புறக்காவல் நிலையம் இரவில் பாராக செயல்படுகிறது

கூடலூர், ஜன. 24:  கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் திறப்புவிழா கண்ட சில நாட்களிலேயே மூடப்பட்ட புறக்காவல் நிலையம் இரவு நேரங்களில் பாராக மாறுவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். கூடலூர் வடக்கு காவல் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டி கூடலூரிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் அதிகமாக பதியப்பட்டுள்ளது. மேலும், சட்ட ஒழுங்கு பிரச்னை அதிகமாக இருப்பதால் கூடலூரில் இருந்து போலீசார் சென்று கட்டுப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. இதனால், இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி அப்பகுதியில் புதியதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அன்றைய தேனி எஸ்பி  பாஸ்கரன் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

அதில் ஒரு எஸ்எஸ்ஐ, ஏட்டு, ஒரு போலீஸ் என சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும் 24 மணி நேரமும் டூவீலரில் ரோந்து செல்லும் வகையில் போலீசார் நியமிக்கப்பட்டனர். இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். எல்லாம் ஒருசில வாரங்கள் தான் நடந்தன. அதன்பிறகு போலீசார் பற்றாக்குறை என இந்த புறக்காவல்நிலையம் பூட்டப்பட்டு கிடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,`` இங்கு கொலை, கொலை முயற்சி வழக்குகளும், சட்ட ஒழுங்கு பிரச்னை இருந்ததால்தான் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால், திறந்து ஒருசில வாரங்களிலேயே பூட்டப்பட்டது. இதனால் புறக்காவல் நிலையப்பகுதியை சிலர் இரவு நேரங்களில் பாராக பயன்படுத்துகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி இங்கு மீண்டும் புறக்காவல் நிலையம் செயல்பட தேனி எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : outpost ,opening ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு