×

நாட்டில் சாலை மேம்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது அமைச்சர் உதயகுமார் தகவல்

திருமங்கலம், ஜன.24: நாட்டில் சாலை மேம்பாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. எஸ்பி மணிவண்ணன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி கணேசன், திருமங்கலம் டிஎஸ்பி அருண் முன்னிலை வகித்தனர். ஆர்டிஓக்கள் செல்வம், சுரேஷ், பொன்னுரங்கம் வரவேற்றனர். கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் பேரணியை துவக்கிவைத்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசுகையில், உலகில் விலை மதிப்பில்லாதது மனிதஉயிர். ஆனால் நவீனகாலத்தில் இதனை காப்பது சவாலான பணியாக இருக்கிறது. இதற்கு காரணம் சாலை விபத்துகளாகும். சாலை விபத்துகளை குறைக்கும் வண்ணம் தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் சாலைவிபத்துகளை மத்தியஅரசு கணக்கீடு செய்ததில் தமிழகத்தில் தான் விபத்துகள் குறைவு என தெரியவந்துள்ளது. நாட்டிலேயே சாலை மேம்பாடு, சாலைவசதிகளை விரிவுபடுத்தி புதியசாலை அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்புகளில் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை சாலைவிபத்து இல்லாத மாநிலமாக மாற்றவேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும் என்றார். இதனை தொடர்ந்து அமைச்சர் உதயகுமார், எஸ்பி மணிவண்ணன் உள்ளிட்டோரும் மாணவ, மாணவியர்களுடன் பேரணியாக 3 கி.மீ தூரம் நடந்து சென்று விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

Tags : Tamil Nadu ,country ,Udayakumar ,
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...