முன்புறம் அங்கன்வாடி, பின்புறம் பள்ளி டிரான்ஸ்பார்மர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தால் பரபரப்பு

சோழவந்தான், ஜன.24:  சோழவந்தானில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி அருகே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சோழவந்தானில் ரயில்வே மேம்பாலப் பணிகள் சுமார் நான்கு வருடத்திற்கு முன் தொடங்கியது. இன்னும் முடிவடையாமல் உள்ளது. பாலம் அருகில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பதற்காக ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள சில மின் கம்பங்கள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டது. முக்கியமாக கால்நடை மருத்துவமனை அருகில் சாலையோரம் உள்ள பழைய டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்கும் பணிகள்   தற்போது  நடைபெறுகிறது.

இந்த டிரான்ஸ்பார்மர் இணைப்புகளை மாற்றி கொடுப்பதற்காக சங்கங்கோட்டை தெருவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. இந்த இடத்தின் பின்பகுதியில் 35 குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், முன்பகுதியில் 20 குழந்தைகள் பயிலும் அங்கன்வாடியும்  உள்ளது. எனவே இந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது என இப்பகுதி பொதுமக்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “துவக்கப்பள்ளியில் கட்டிடத்தை ஒட்டியும், அங்கன்வாடியின் எதிரிலும் இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்தால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும். இதன் அருகில் மந்தைக்களம் மைதானத்தில் விரிவான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காது. எனவே தற்போது பள்ளி, அங்கன்வாடி அருகே நடைபெறும் பணிகளை நிறுத்தி, மந்தைக்களம் மைதானத்தில் மாற்றி அமைக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: