×

குடிநீர் பைப்லைன் பணிகளை நிறுத்தி மறியல் பழநி அருகே பரபரப்பு

பழநி, ஜன. 24: பழநி அருகே பாலசமுத்திரத்தில் குடிநீர் பைப்லைன் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் பணிகளை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் பாலாறு- பொருந்தலாறு அணை உள்ளது. 65 அடி உயரம் உள்ள இந்த அணையின் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தவிர, பழநி நகருக்கு ரூபாய் 21.60 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்லைன் பதித்து குடிநீர் சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், மற்றொரு கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் சுமார் 40 கிராமங்களுக்கு பைப்லைன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அணை உள்ள பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு பாலாறு அணை ஆற்றுப்படுகையில் உறைகிணறு தோண்டி தண்ணீர் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

தற்போதே பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு அமைக்கப்பட்ட உறைகிணற்றில் தண்ணீர் போதிய அளவு கிடைப்பதில்லை. இதனால் தண்ணீர் விநியோகிக்கப்பதில் பற்றாக்குறையான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பழநி கோயிலுக்கு பாலாறு அணை ஆற்றுப்பகுதியில் தடுப்பணை அமைத்து ரூபாய் 22.77 கோடியில் குடிநீர் பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பணிகள் நடக்க உள்ளது. சுமார் 14 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்படும்போது, அதன் கீழ் இருக்கும் பாலசமுத்திரம் பேரூராட்சியின் குடிநீருக்கான உறைகிணற்றிற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பாலசமுத்திரம் பேரூராட்சி கிராமமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அப்போது குடிநீர் வடிகால் வாரியத்தால் தற்போது கட்டப்படும் தடுப்பணைக்கு மேல்பகுதியில் பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்ய புதிய உறைகிணறு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட்டாத கூறப்படுகிறது. இதுதொடர்பாக எந்தவித செயல்பாடும் இல்லாத நிலையில் கடந்த 2 நாட்களாக பிரத்யேக பைப் லைன் அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்தால் சாலையோரங்களில் குழி தோண்டப்பட்டு வருகிறது. இதனால் அத்திரமடைந்த கிராமமக்கள் சிலர் நேற்று முன்னாள் பேரூராட்சித்தலைவர் காளிமுத்து தலைமையில் பணியை தடுத்து நிறுத்தி பழநி- பாலசமுத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென்றும், உறைகிணறு அமைப்பது தொடர்பாக முடிவு எட்டிய பிறகே பணிகள் துவங்க அனுமதி முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பைப்லைன் பதிப்பதற்காக துவங்கப்பட்ட குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் திரும்ப சென்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டியதிருக்குமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்து சென்றனர்.

Tags :
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு