×

திண்டுக்கல் ஜிஹெச் மகப்பேறு, குழந்தை சிகிச்சை பிரிவில் தேசிய லக்ஷயா குழுவினர் ஆய்வு

திண்டுக்கல், ஜன. 24: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு தரத்தினை மதிப்பீடு செய்து சான்றளிப்பதற்காக தேசிய அளவிலான லக்ஷயா குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு தனித்துவத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு மாதம் சராசரியாக 600 பெண்களுக்கு பிரசவம் நடைபெறுகிறது. அதேபோல் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவிலும், பிறந்த குழந்தைகள் முதல் 1 வயது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு ரூ.18 கோடி செலவில் ஒரு தரைத்தளம் மற்றும் 5 மாடிகளுடன் 6 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலுள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவை தரத்தின் அடிப்படையில் கூடுதல் நிதி உதவி ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அளவிலான கண்காணிப்பு குழுவினர் (லக்ஷயா) கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட ஆய்வில் திண்டுக்கல் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு 70 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை மறுஆய்வு செய்வதற்காக கேரள மாநிலம், கொல்லம் மாவட்ட காசநோய் அலுவலர் அனு, மங்களூரு அடுத்துள்ள சிலிம்பி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ராகவேந்திரா ராவ் ஆகியோர் நேற்று மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவின் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டால் தர மதிப்பீடப்பட்ட 70 மதிப்பெண்கள் அப்படியே கிடைக்கும். இதன்மூலம் கூடுதல் நிதி பெற வாய்ப்புள்ளது. ஆய்வின்போது மகப்பேறு தலைமை மருத்துவர் விஜயாலோகநாதன், நிலைய மருத்துவ அதிகாரி சந்தானகுமார், மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Dindigul GH National Lakshaya ,
× RELATED திண்டுக்கல் ஜிஹெச் மகப்பேறு, குழந்தை...