கொடைக்கானலில் கஜா புயல் நிவாரணம் இதுவரை கைக்கு வரவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

கொடைக்கானல், ஜன. 24: கொடைக்கானலில் கஜா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வரவில்லை என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. பிரையண்ட் பூங்கா வளாகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு ஆர்டிஓ சுரேந்திரன் தலைமை வகித்தார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கொடைக்கானலில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் போது மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளில் விளைபயிர்கள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிற்கு நாசமாகின. இதற்கு தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தியும் இதுவரை உரிய நஷ்டஈடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் இதற்கு விரைவில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து மன்னவனூர் விவசாயிகள், தங்கள் பகுதியில் முக்கிய நீராதாரமாக விளங்கும் பரப்பாறு, கோனளாறு ஆகிய நீர்த்தேக்கங்கள் உள்ள வனப்பகுதியை வருவாய் நிலமாக மாற்றி தர வேண்டும், கஜா புயலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். வனவிலங்குகளால் உயிர்சேதம், பயிர்சேதங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர் வில்பட்டி விவசாயிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களின் பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அனைத்து விவசாயிகளின் குறைகளையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ உறுதியளித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், தாசில்தார் வில்சன் தேவதாஸ், வனவர் ஜாபர், வேளாண் விற்பனை அலுவலர் கணேசன் மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: