வீரசோழன் ஆற்றின் கரையோரம் டாஸ்மாக் கடை திறந்தால் முற்றுகை போராட்டம்

கும்பகோணம், ஜன. 24: திருவிடைமருதூர் வீரசோழன் ஆற்றின் கரையில் டாஸ்மாக் கடை திறந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். திருவிடைமருதூர் அணைக்குடியான சாலையில் வீரசோழன் ஆற்றின் கரையில் பழமையான மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலின் சுவாமிகள் தீர்த்தவாரிக்கு காவிரி ஆற்றுக்கு சென்றும், மேலமாரியம்மன் கோயில் அம்பாளும், வீரசோழன் ஆற்றின் கரையிலுள்ள மண்டபத்தில் இளைப்பாறுவது வழக்கம். எனவே இதன் அருகில் டாஸ்மாக் கடையை திறந்தால் குடிமகன்களின் கூடாரமாக மண்டபம் மாறிவிடும். மேலும் கல்லணை- பூம்புகார் சாலையில் இருந்து மயிலாடுதுறை சாலை வருவதற்கு பிரதான சாலையாக இருப்பதால் தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே இந்த சாலையோரம் டாஸ்மாக் கடை திறந்தால் தினம்தோறும் பிரச்னைகள் உருவாகும்.

இதனால் அப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்ககூடாது என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அப்பகுதியான வீரசோழன் ஆற்றின் கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் துவங்கின. அப்போது அப்பகுதியில் கொலை மற்றும் கொள்ளை நடந்ததால் டாஸ்மாக் கடை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது வீரசோழன் ஆற்றின் கரையில் டாஸ்மாக் கடை திறப்பதற்காக கட்டுமான பணி மும்முரமாக துவங்கியுள்ளது. எனவே வீரசோழன் ஆற்றில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது. மீறி கடையை திறந்தால் அப்பகுதி பொதுமக்கள், பக்தர்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மகாலிங்கசுவாமி பக்தர் மன்றம் மற்றும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: