×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.24: குடியரசு தினத்தன்று (26ம்தேதி) புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு வருகிற 26ம் தேதி மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நியாய விலை கடையின் செயல்பாட்டில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் வகையில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளின் பட்டியல் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியின் கிராம சபை முன்பாக வைக்கப்பட உள்ளன. பொது விநியோக திட்ட செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கான குடும்ப அட்டைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்பட உள்ளன. கூட்டங்களில் தெரிவிக்கப்படும் புகார்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட, வட்ட குறைதீர்க்கும் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 7 தினங்களுக்குள் தீர்வு காணப்படும்.

மேலும், நியாய விலை கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கைக்கு உட்படுத்தி குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிக்கும் குறைபாடுகளை பதிவு செய்து குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். எனவே, கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது விநியோக திட்ட செயல்பாடுகள் தொடர்பான தங்கள் கருத்துக்களையும், குறைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Tags : Sabha ,meeting ,panchayats ,Pudukkottai district ,
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...