×

க.பரமத்தியில் செவ்வாய் கிழமை தோறும் கூடும் கால்நடை வாரச்சந்தை இனி காலை 5 மணிக்கு மேல் தான் செயல்படும்

க.பரமத்தி, ஜன. 24: செவ்வாய்க்கிழமைதோறும் கூடும் க.பரமத்தி கால்நடை வாரச்சந்தை இனி காலை 5 மணிக்கு மேல் தான் செயல்படும். மீறி முன்னதாக வியாபாரத்திற்காக கொண்டு வந்து விற்கவோ, வாங்கவோ செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என க.பரமத்தி போலீசார் எச்சரிக்கை பலகை வைத்திருப்பது கால்நடை விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 30 ஊராட்சிகளை கொண்ட ஒன்றியமாக க.பரமத்தி உள்ளது. இதில் 30 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சிகளில் வசிக்கும் விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பை பிரதானமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கரூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பையே நம்பியிருக்கின்றனர். இதில் ஆடுகளை அதிகமான விவசாயிகள் வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

க.பரமத்தி கடைவீதியில் திங்கள் கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கி செவ்வாய்கிழமை அதிகாலை வரை கூடும் கால்நடை வார சந்தையில் கால்நடைகளை விற்று விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் பகல் முழுவதும் கால்நடைகளை மேய விட்டு விட்டு இரவு பாதுகாப்பாக பட்டி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இதனை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் திருடி கொண்டு வந்து இரவில் நடத்தப்படும் க.பரமத்தி கால்நடை சந்தையில் விற்று விடுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

எனவே இதனை தடுக்க இரவில் நடைபெறும் க.பரமத்தி கால்நடை வாரச்சந்தையை பகலில் திறக்க வேண்டுமென ஆடு வளர்க்கும் விவசாயிகள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது க.பரமத்தி கால்நடை சந்தை செவ்வாய்கிழமை காலை 5 மணி முதல் செயல்படும். இதனை மீறி முன்னதாக இரவில் ஆடு வியாபாரத்திற்காக கொண்டு வந்து விற்றாலும் அதனை வாங்கினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் எச்சரிக்கை பலகை வைத்திருப்பது. கால்நடை விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது