ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டு சிறை: செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெசன்ட் நகரில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய வழக்கில் 4 வாலிபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து 17வது செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி தெருவை சேர்ந்தவர்  ஜீவரத்தினம் (32).  ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 2012ம் ஆண்டு வழக்கம்போல் இரவு ஆட்டோ ஓட்டுவதற்காக எம்.ஜி ரோட்டில் ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு நின்றிருந்தார். அப்போது இவரது நண்பர் கலையரசன் வேறு ஆட்டோவில்  அங்கு வந்துள்ளார். இதற்கிடையே பெசன்ட் நகர், ஓடை குப்பம், வேளாங்கண்ணி கோயில் தெருவை சேர்ந்த புஷ்பராஜ் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார்.  அப்போது புஷ்பராஜ் மீது கலையரசனின் ஆட்டோ லேசாக மோதியதால்  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை ஜீவரத்தினம் பேசி சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற புஷ்பராஜ் தனது உறவினர்கள், நண்பர்கள் கதீர் (20), தளபதி (20), ஜெய்சன் (20) ஆகியோருடன் மீண்டும் ஆட்டோ நிறுத்ததிற்கு வந்துள்ளார். பின்னர், கத்தியை எடுத்து, ‘‘எங்கேடா என்னை இடித்த கலையரசன்?’’  என்று ஆபாச வார்த்தைகளால் திட்டி விட்டு, ஜீவரத்தினத்தை பார்த்து, ‘நீதானடா அவனை தப்பிக்க விட்டாய்’’ என்று கூறி, ஜீவரத்தினத்தை 4 பேரும் சேர்ந்துக்கொண்டு சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர், அருகே இருந்தவர்கள் ஓடி  வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சென்னை, 17வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.டஸ்நீம்  முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பி.சரவணன் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதி இந்த வழக்கில் 4 பேர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கும் 10 ஆண்டு சிறை  தண்டனையும் தலா 5 ஆயிரம் அபராதம் என மொத்தம் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: