சங்கர் நகர் பழைய காவல் நிலையம் அருகே பரபரப்பு: மர்ம பொருள் வெடித்து சிதறியதில் பெண் துப்புரவு தொழிலாளி காயம்: பொதுமக்கள் பீதி

பல்லாவரம்: பம்மல், சங்கர் நகர் 22வது தெருவில் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அப்போது குற்ற வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் பறிமுதல்  செய்யப்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.   மேலும் அதே பகுதியில் உள்ள மக்களும் தங்கள் பங்கிற்கு அதே இடத்தில் குப்பைகளை கொட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று, நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அங்கு கிடந்த குப்பைகளை அகற்றுவதற்காக வந்தனர்.  அப்போது, அங்கு  கிடந்த மர்மப்பொருள் மீது நகராட்சி பெண் துப்பரவு தொழிலாளி தேவகி (40) என்பவர் எதிர்பாராமல் மிதித்துள்ளார். உடனே மர்மப்பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் தேவகி காலில் காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ  இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து பம்மல் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி உடனடியாக சங்கர் நகர் காவல்  நிலையத்திற்கு தெரிவித்தார்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்மப்பொருள் வெடித்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது மீண்டும் அடுத்தடுத்து 5 முறை பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த  போலீசார் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து தடயவியல் நிபுணர் சோபியா வரவைக்கப்பட்டார். அவர் வெடித்த மர்மப்பொருளை சோதனை செய்தபோது, ‘ஒயிட் பாஸ்பரஸ்’ எனப்படும் வேதியியல் தனிமம்  என்பது தெரிய வந்தது.

ஆனாலும் அதனை ஆய்வுக்கு அனுப்பி, அறிக்கை வந்த பிறகே வெடித்த மர்மப்பொருளின் முழு விபரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே மர்மப்பொருள் வெடித்த இடம் பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம்  செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் அங்கு நடமாடவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்த வெடி விபத்து குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடத்தில் மர்ம  பொருளை வீசி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தற்போது தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Police Station ,Sankar Nagar Near Old ,Woman Cleaning Worker ,
× RELATED ஓசூரில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு