×

தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் சாலை தடுப்பில் பஸ் மோதி விபத்து: பயணிகள் தப்பினர்

பல்லாவரம்: தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் கோவூர் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் நேற்று காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள்  உயிர் தப்பினர்.
சேலத்தில் இருந்து சென்னை, கோயம்பேடு நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில்  30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்தை சேலத்தை சேர்ந்த கருப்பண்ணன் (48) என்பவர் ஓட்டினார். நடத்துநராக  நாமக்கல் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (50) இருந்தார். காலை வேளை என்பதால் பயணிகள் அனைவரும் பாதி தூங்கியும், பாதி தூங்காத நிலையிலும் இருந்தனர். தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் குன்றத்தூர் அடுத்த கோவூர்  அருகேயுள்ள தரப்பாக்கம் என்னுமிடத்தில் பஸ் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள தடுப்பை உடைத்துக்கொண்டு எதிர்ப்புறம் சாலையில் போய் நின்றது.

இதில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட பயணி தங்கராஜ் என்பவரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து ஏற்பட்டதும், அந்த வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி  நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் தரப்பாக்கம் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags :
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...