×

தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி விபத்து

பல்லாவரம், ஜன.24:  தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் கோவூர் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் நேற்று காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக  பயணிகள் உயிர் தப்பினர். நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் புறப்பட்டது.இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனா். சேலத்தை சேர்ந்த டிரைவர் கருப்பண்ணன் (48), நாமக்கல்லை சேர்ந்த  கண்டக்டர் ஜெயச்சந்திரன் (50) ஆகியோர் பணியில் இருந்தனர். நள்ளிரவு என்பதால் பயணிகள் அனைவரும் பாதி தூங்கியும், பாதி தூங்காத நிலையிலும் இருந்தனர்.  தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் நேற்று காலை பஸ் வந்து  கொண்டிருந்தது.குன்றத்தூர் அடுத்த கோவூர் அருகே தரப்பாக்கம் என்ற பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு ஓடி, சாலை நடுவே உள்ள சென்டா் மீடியனை உடைத்துக் கொண்டு எதிர் திசை  சாலையில் சென்று நின்றது. இதில் டிரைவர், கண்டக்டர், பயணி தங்கராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதை பார்த்ததும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று, நடுரோட்டில் இருந்த பஸ்சை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் தரப்பாக்கம் பகுதியில் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Central Media Center ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...