×

ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கூறிய பிறகும் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத வருவாய் துறை அதிகாரிகள்

செங்கல்பட்டு, ஜன. 24: ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், வருவாய் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயி, கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். செங்கல்பட்டு  தாலுகா  கொங்கணாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்,  செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிசை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது.செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட கொங்கணாஞ்சேரி  கிராமத்தில்  எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. அதில், பயிர் செய்து வருகிறோம். கடந்த 2005ம் ஆண்டு முதல் சிலர், எனது நிலத்துக்கு செல்லும் கால்வாய் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.இதனால், எனது  நிலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. கால்வாய் மூலம் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதைதொடந்து, கடந்த 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆக்கிரமிப்புகளை  அகற்ற வேண்டும் என வழக்கு  தொடர்ந்தேன்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல்,  நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக  பொய்யான அறிக்கையை தயார் செய்து கொடுத்தனர். இது சம்பந்தமாக அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டரிடம் நான் நேரில் சென்று மனு கொடுத்தேன். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுசம்பந்தமாக  வருவாய்த்துறை அதிகாரிகளை கேட்கும்போது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயம் செய்ய முடியாமல் கடும் அவதியடைந்து வருகிறோம். எனவே, மாவட்ட கலெக்டர் நேரில்  பார்வையிட்டு விவசாயத்துக்கு செல்லும் வரத்து கால்வாய்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவேண்டும். தடையின்றி விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Department ,High Court ,removal ,
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...