×

ஒரு அடி நிலம் புதிதாக வாங்கினேன் என காண்பித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில், ஜன.24: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  எதிர்வரும் காலத்தில் நாடு முழுக்க பாஜ கட்சி அனைத்து மாநிலங்களையும் ஆளுகின்ற நிலைக்கு நரேந்திர  மோடி கொண்டு வரும் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் திறம்பட செயல்படும். தமிழகத்தில் மாநில தலைவர் பதவி கூடிய சீக்கிரம் அறிவிக்கப்படும். மாநில தலைவர் பதவிக்கு கருத்து கேட்கப்பட்டுவிட்டது. நாட்டில்  மொத்தம் 21 மாநிலங்களில்தான் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற இடங்களில் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தின் தென் பகுதிகளில் மணல் கடத்தல்காரர்களுக்கு யார் பக்கபலமாக இருப்பார்கள் என்பது உலகறிந்த விஷயம்.  எந்த  அரசியல்வாதி, எந்த எம்.எல்.ஏ பின்னால் இருந்தார் என்பது தெரியும். அவர் (முன்னாள் எம்.எல்.ஏஅப்பாவு) தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு அந்த வாசகங்களை கூறியிருப்பார். எனது சொத்து கணக்கு, எனது உடன் பிறந்தவர்கள்,  குடும்பத்தினர் அத்தனை சொத்துக்கணக்கை கொடுக்க தயாராக உள்ளேன். ஒரு அடி நிலம் புதியதாக வாங்கினேன், வங்கியில் பணம் போட்டுள்ளேன் என்று காண்பித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன். அப்பாவு சொத்து கணக்கை  காட்டட்டும், அவர் ஆசிரியராக இருந்தவர். இருந்தாலும் அவர் குற்றச்சாட்டு கூறியதால் எந்த விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன்.

மாநில அரசு அவரிடம் சொத்து எவ்வளவு முன்பு இருந்தது, இப்போது எவ்வளவு இருக்கிறது என்பதை கணக்கெடுக்க வேண்டும். மணல் கடத்தலுக்கு பக்க பலமாக இருந்தர்கள் யார்? என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். என்னையும்  விசாரிக்கட்டும், நான் தயார். குமரியில் எங்கு கேமரா வைக்க கூடாது என்று நான் கூறினேன். மற்ற கட்சிகாரர்களிடம் கேளுங்கள், மனசாட்சிப்படி பொன்.ராதாகிருஷ்ணன் ஒத்த பைசா வாங்கியதாக  கூறட்டும். வில்சன் கொலைக்கும்,  கொலையை மறைப்பதற்கு முயற்சிப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது எனது கருத்து. இங்கு ஆறு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாவட்டத்தில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்து  ஜெயித்துள்ளார். நம்மை காவல் காக்கும் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார் என்றால் இவர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?.  சட்டசபையில் அவர்கள் பேசவில்லையே? பயங்கரவாதி என்பது சிசிடிவி கேமராவில் உடன் போட்டு  காண்பித்தனர். பயங்கரவாதிக்கு எப்படி மதம் வர முடியும். இதற்கு சர்வ கட்சி கூட்டம் நடத்தியதாக கேள்விபட்டேன். அதில் வில்சன் கொலையை பற்றி பேசவில்லை. இது வில்சனுக்கு அளிக்கும் மரியாதையா? எம்.எல்.ஏ.க்களுக்கு, எம்பிக்கு  இதனை பற்றி பேச யோக்கியதை இல்லை. அவர்கள் பயப்படுகின்றனர். அடுத்த இலக்கு அவர்களாக மாறிவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. உயிருக்கு மேல் பயம் உள்ளவர்கள் அரசியலுக்கு எதற்கு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் 20  லட்சம் மக்களை ஏன் அழிக்கின்றீர்கள்.

 பயங்கரவாதிகளுக்கு எதிராக பேசும்போது நம்மையும் அறியாமல் மறைமுகமாக நம் மீது குறிகள் வைக்கப்படுகின்றன. எந்த நிமிஷமும் உயிர் போகலாம், கவலை இல்லை.  எங்களை எங்களால் காப்பாற்றிக்கொள்ள முடியும். சாவதை  பற்றியும் கவலை இல்லை. மாவட்டம் நன்றாக இருக்க விரும்புகிறோம். மதத்தையும், மக்களையும் பிரித்து முட்டாள் ஆக்காதீர்கள். அமைச்சர் ஜெயக்குமார் எனக்கு சர்டிபிகேட் தர வேண்டிய அவசியம் இல்லை. இரு பெரிய நிகழ்வுகளில்  பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு என்ன செய்தார் என்பதை ஜெயலலிதா பேசியுள்ளார்.  கூட்டணி தர்மம் ஒன்று உள்ளது. அதனால் நான் மவுனமாக உள்ளேன். தமிழக முதல்வர், துணை முதல்வர் மீதும் நல்ல மரியாதை வைத்துள்ளோம்.   கொச்சி, மும்பை, குஜராத், டெல்லியில் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.  2021 தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமை முடிவு செய்யும். ரஜினிகாந்த் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். ரஜினியை மையப்படுத்தினால்தான் கதை நடக்கும் என்று எல்லா கட்சியினரும் நினைக்க தொடங்கியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!