கூடுதல் மாணவர்களை சேர்க்க மக்களின் ஒத்துழைப்பும் தேவை

விக்கிரவாண்டி, ஜன. 24:விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூர் மதுரா மேல்பாதி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் தலைமை தாங்கினார். பனையபுரம் பள்ளி தலைமையாசிரியர் விஸ்வநாதன், வட்டார மேற்பார்வையாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிதலைமை ஆசிரியர் மஞ்சுளா வரவேற்றார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜெயசந்திரன் கலந்துகொண்டு மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் பேசினார். அப்பள்ளியில் மொத்தம் நான்கு மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இதனால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை கேட்கப்பட்டது.

 இதில் கடந்த 10 ஆண்டு களாக பள்ளி கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் அப்படியே விட்டதால் கட்டிடம் மற்றும் ஜன்னல்கள் அச்சுறுத்தும் நிலையில் இருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நலன் கருதி அருகிலுள்ள பள்ளிக்கு அனுப்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி கட்டிடத்தை அங்குள்ள ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் சீரமைத்து பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி வரும் கல்வி ஆண்டில் கூடுதல் மாணவர்களை சேர்க்க எங்களுடன் பொது மக்களாகிய நீங்களும் ஒத்துழைப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.  நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் கருணாநிதி, கோதண்டபாணி, ஆசிரியர் பயிற்றுநர் லட்சுமி, சிறப்பு பயிற்றுநர் இருதயராஜ் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா உட்பட மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: