×

திருந்தி வாழப்போவதாக எஸ்பியிடம் மனு

விழுப்புரம், ஜன. 24:  மூன்று எண் லாட்டரி சீட்டில் சிறைசென்ற ஆசாமி, குடும்பத்திற்காக திருந்தி வாழ்வதாக கோரி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார்.  விழுப்புரம், வி.மருதுார் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆன நிலையில், இரு மகன்கள் உள்ளனர். குடும்ப வறுமை காரணத்தாலும், என் தாயின் முடக்குவாத வியாதிக்கு மருத்துவ செலவு பணம் இல்லாததாலும் நான் சில காலம் மூன்று எண் லாட்டரி சீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தேன். அதன் மூலம், என் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிறை சென்று ஜாமீனில் வந்துள்ளேன். இதனால் என் மனைவி சுமதியோடு, குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, தற்கொலைக்கு முயற்சி செய்தார்.  அவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினேன். என் மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி, இனிவரும் காலங்களில் எந்த ஒரு சூழ்நிலையிலும், லாட்டரி வியாபாரத்தில் நான் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்கிறேன். மீறினால், தாங்கள் எடுக்கும் சட்டபூர்வ நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன். எனக்கு, எதிர்காலத்திற்கு, ஏதேனும் தொழில் துவங்க அரசு மூலமோ, வங்கி மூலமோ ஆவனம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : SP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்