சாலைகளில் கால்நடைகளை விட்டால் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை

மரக்காணம், ஜன. 24:  மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இங்கு அனைத்து சாலைகளிலும் பகல், இரவு நேரங்களில் கூட வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்பகுதியில் உள்ள ஒரு சிலர் தங்களது வீடுகளில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதுபோல் கால்நடைகளை வளப்பவர்கள் அவற்றை முறையாக பராமரித்து வீடுகளில் கட்டி வைக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.  இதுகுறித்து மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகணன் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை முறையாக பராமரிக்காமல் வெளியில் விட்டு விடுகின்றனர்.

இதுபோல் விடப்படும் கால்நடைகள் கட்டுப்பாடின்றி சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிகிறது. இங்கு சாலைகள், பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தினமும் சாலை விபத்து ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் பொது சுகாதார சீர்கேடும் உண்டாகிறது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் தினமும் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கின்றனர். எனவே ஆடு, மாடுகளின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.   இதுபோல் வீட்டில் வைத்து பராமரிக்காமல் சாலைகள், பொது இடங்களில் விட்டால் தமிழ்நாடு மாவட்ட நகராட்சி சட்டம் 1920 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி எவ்வித முன்னறிவிப்பின்றி பேரூராட்சியின் மூலம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அருகில் இருக்கும் கால்நடை பராமரிப்பு  மையத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் இதற்குண்டான செலவினத்தை காலநடைகளின் உரிமையாள்ர்களிடம் வசூலிக்கப்படும். மேலும் மேற்குறிப்பிட்ட சட்டங்களின் படி உரிய நடவடிக்கையும் அதன் உரிமையாளர்கள் மீது எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  

Related Stories: