×

தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க விரைவில் ஒப்புதல் கிடைக்கும்

புதுச்சேரி, ஜன. 24: புதுச்சேரி அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை முதல் மூன்றாண்டுகளில் செய்துள்ள சாதனைகள் குறித்து கல்வி அமைச்சர்  கமலக்கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி
யளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: புதுவை மாநிலத்தில் உயர்கல்வித்துறையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற கடந்த 2019ம் ஆண்டில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கிடைத்தால் புதுவையின் முதல் மாநில பல்கலைக்கழகமாக விளங்கும். காரைக் காலில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி முதுகலை பட்டப்படிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், பொருளாதாரம், கணிதம், வேதியியல் உள்ளிட்ட 11 முதுகலை படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதிலால் நேரு பாலிடெக்னிக்  கல்லூரியில்  மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் கிளை தொடங்கப்பட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு தோல்வியடைந்த மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 50 ஏக்கர் நிலத்தில் ரூ.338 கோடியில் தேசிய திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளியை அமைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. அகில இந்திய அடிப்படையில் நிரப்பப்பட வேண்டிய சுயநிதி இடங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் புதுச்சேரி பொறியியல் கல்லூரி தற்சார்பு நிலையை நோக்கி வருகிறது. 2018-19, 2019-2020 ஆகிய ஆண்டுகளில் ரூ. 14.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2015-16-ல் இளநிலை படிப்பில் 3,564 இடங்களாக இருந்ததை 2019-20-ல் 6,620 இடங்களாகவும், முதுகலை படிப்பில் 605 இடங்களை  800 இடங்களாக உயர்த்தி, அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் கடந்தாண்டு முதல் ஆசிரிய நெறியாளர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 முதல் 15 மாணவர்களுக்கு 1 வழிகாட்டி ஆசிரியர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்படுகிறது.கடந்த 2017-18-ல் முதல் முறையாக அனைத்து கல்லூரிகளின் கல்வி மற்றும் நிர்வாகம் தணிக்கை நடத்தப்பட்டது. நிரந்தர அடிப்படையில் 134 உதவி பேராசிரியர் பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. அனைத்து கல்லூரிகளில் வீடியோ கான்பரசிங், வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி மாதத்தில் புதுச்சேரி விளையாட்டு மற்றும் கலாசார சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார். பேட்டியை தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்கத்தால் தயாரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் -1, பிளஸ் -2 மாணவர்களுக்கான வெற்றி நமதே என்ற கையேடு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்வித்துறை செயலர் அன்பரசு, உயர்கல்வித்துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

Tags : University of Technology ,
× RELATED சென்னை வெள்ள நிவாரணம்: வேலூர் வி.ஐ.டி. பல்கலை. ரூ.1.25கோடி நிதி