கோமாவில் சிகிச்சை பெறும் ஏட்டுவுக்கு அரசு நிதிஉதவி

புதுச்சேரி, ஜன. 24: புதுவை வீமன்நகர் ஓடை வீதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (47). இவர், கிருமாம்பாக்கத்தில் உள்ள தெற்கு சரக போக்குவரத்து காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சுமித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அரியாங்குப்பம் மாதா கோயில் 4 முனை சந்திப்பில் பணியில் இருந்தார். அப்போது குடிபோதையில் ஒரே வண்டியில் வந்த 3 வாலிபர்கள் இவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் கோமா நிலைக்கு சென்றதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஏட்டு சுப்ரமணியனின் மனைவி சுமித்ரா, அண்ணன் வாணிதாசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது மருத்துவ செலவு மட்டுமே ரூ.6 லட்சத்துக்கு மேலாகி விட்டது. மேலும் பல லட்சம் ஆகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் இதுவரை அரசு சார்பில் எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. விபத்து நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அமைச்சரோ, காவல்துறை உயர் அதிகாரிகளோ வந்து பார்க்கவில்லை. எனவே, உயிருக்கு போராடி வரும் சுப்ரமணியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க அரசு நிதிஉதவி அளிக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: