அனைத்து அட்டவணை இனத்தவருக்கும் வட்டி மானியம் வெளியிட அரசாணை

பாகூர், ஜன. 24: கூட்டுறவு துறையின் வீட்டு வசதி கடன் திட்டத்தில், அனைத்து அட்டவணை வகுப்பு பயனாளிகளுக்கும் வட்டி மானியம் அளிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என அம்பேத்கர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்க தலைவர் தெய்வசிகாமணி மற்றும் நிர்வாகிகள், அமைச்சர் கந்தசாமியிடம் அளித்துள்ள மனு: மத்திய அரசின் சிறப்புக்கூறு திட்ட நிதியின் மூலம் புதுச்சேரி அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் அட்டவணை வகுப்பினர்கள், சமூக பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர். இதேபோல், புதுச்சேரி அரசின் கூட்டுறவு துறையும்,  அட்டவணை வகுப்பு மக்களின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அட்டவணை வகுப்பு கூட்டுறவு சங்கங்களுக்கு பங்கு மூலதனம் அளித்தல், மேலாண்மை நிதி அளித்தல், கட்டிடம், நிலம், புனரமைப்பு செய்ய கடன் வழங்குதல், வட்டி மானியம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வீடு கட்டும் கூட்டுறவு சங்கத்தில், கடன் பெற்ற உறுப்பினர்களுக்கு வட்டி மானியம் அளிக்கும் திட்டத்தில், புதுச்சேரி மாநில கூட்டுறவு துறை திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் துணை விதியில் உள்ள கட்டுப்பாடுகள், கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த மானிய திட்டத்திற்கு எதிரானதாகும். மேலும், வட்டி மானியம் திட்டம் சிறப்புக்கூறு திட்ட வழிகாட்டி நெறிகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். எனவே, அந்த அரசாணையில் உள்ள துணை விதி எச் என்ற பிரிவை நீக்கி, அனைத்து அட்டவணை வகுப்பு பயனாளிகளும் வட்டி மானியம் பெறும் வகையில், புதிய அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: