×

ஏஎப்டி மில்லை மூடும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

புதுச்சேரி, ஜன. 24: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:  புதுச்சேரி மாநிலத்தில் பிரெஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலை களும் தொழிலாளர்களும் முக்கிய பங்காற்றி வந்துள்ளனர். ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் மாறி மாறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்களின் தவறான கொள்கையாலும், அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டாலும் புதுச்சேரி பஞ்சாலை தொழில்கள் படிப்படியாக சீரழிக்கப்பட்டு வந்தன. ஓரளவு இயங்கி கொண்டிருந்த சுதேசி, பாரதி மில்களில் முதற்கட்டமாக டைஹவுஸ் பிரிவு மூடப்பட்டு, தறி பிரிவு படிப்படியாக மூடப்பட்டு தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது.  சில மாதங்களுக்கு முன்பு முதல்வர், துறை அமைச்சர் கலந்து கொண்ட பஞ்சாலைகளை செயல்படுத்துவதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில் தற்சமயம் இயங்குவதற்கு தகுதியான தறிப்பிரிவை ரோடியர் பஞ்சாலையில் செயல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வலியுறுத்தியதை புதுவை அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய பாஜக அரசு பல மாநிலங்களுக்கு ஜவுளி பூங்கா துவங்க நிதி ஒதுக்கி
யுள்ளது. ஆனால் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி ரோடியர் ஆலையை மூட துடித்து கொண்டு இருக்கிறார்.மத்திய அரசிடமிருந்து பஞ்சாலை தொழிலை காக்க எத்தகைய நிதி உதவியும் பெறவில்லை, கோரிக்கை கூட வைக்கவில்லை. இந்த நிலையில் ஆலையை நிரந்தரமாக மூடுவதும், கவர்னர் மற்றும் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள்  மூடிய பஞ்சாலைகளை உடனடியாக திறந்து இயக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பணிக்கொடை, வேலை செய்த தொழிலாளிக்கு உரிய சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெற்று பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். இல்லையென்றால் அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிரான மாபெரும் இயக்கத்தை புதுச்சேரி மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Communist ,closure ,APT ,
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...