பென்னாத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் 43 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வழங்கினார்

அணைக்கட்டு, ஜன. 24: வேலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட வருவாய் துறை இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் பென்னாத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் நேற்று மாலை நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை கலெக்டர் காமராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணமுத்து, துணை தாசில்தார் விநாயகம், தனி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன் வரவேற்றார். வேலூர் மக்கள் நீதிமன்ற தலைவரும், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி குணசேகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், கூடுதல் சார்பு நீதிபதி ஆனந்தன் ஆகியோர் சட்ட விளக்கவுரையாற்றினர். முகாமில் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி செல்வசுந்தரி மாணவர்களிடம் பேசியதாவது:

நிதியில்லை என்பதற்காக நீதியில்லை என்றாகிவிடக்கூடாது என்பதற்காகதான் தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பெயரில் வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட வருவாய் துறையுடன் இணைந்து இந்த முகாமை நடத்தி வருகிறது. திறக்காத கதவுகளும் இங்கே நீதி மன்ற கதவை தட்டினால் திறக்கும் என்பார்கள், ஆனால் திறக்கபட வேண்டிய கடைமைகள் இன்று உங்கள் வீட்டு கதவுகளை தட்டி கொண்டிருக்கிறது உங்களுக்கு உதவி செய்வதற்காக, இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் சட்டத்தில் உள்ளதை சரியாக புரிந்து கொண்டு ஆபத்தில் உள்ளவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும், இது போன்று சட்ட பணிகள் ஆணைக்குழு மூலம் அதற்கு தீர்வு உண்டு என்பதை மற்றவர்களுக்கு எடுத்துறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, வருவாய் துறையினர் சார்பில் தேர்வு செய்யபட்ட 43 பயனாளிகளுக்கு முதியோர் உதவிதொகைகான ஆணையை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செல்வசுந்தரி வழங்கினார். முன்னதாக, தனியார் வங்கி சார்பில் பள்ளிக்கு இலவசமாக வழங்கப்பட்ட யுபிஎஸ், ஆம்ப்ளிபயரை நீதிபதி பள்ளிக்கு வழங்கினார். வருவாய் ஆய்வாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories: