×

சாலை பாதுகாப்பு விழாவில் எஸ்பி எச்சரிக்கை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை

குடியாத்தம், ஜன. 24: குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நடந்த மாரத்தான் போட்டியை எஸ்பி பிரவேஷ்குமார் தொடங்கி வைத்து பேசுகையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மினி மாரத்தான் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் டிஎஸ்பி சரவணன் தலைமை தாங்கினார். தாலுகா இன்ஸ்பெக்டர் கவிதா, பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் வரவேற்றார்.

மாரத்தான் போட்டியை எஸ்பி பிரவேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது: சாலையில் பைக் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆண்டுதோறும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகிறோம். அதன்படி, கடந்தாண்டை விட இந்தாண்டு பார்க்கும்போது 24 சதவீத விபத்துகள் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாரத்தான் போட்டி புதிய பஸ் நிலையத்திலிருந்து சென்றாம்பள்ளி வரை நடந்தது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : motorists ,SP ,Road Safety Festival ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்