×

வேலூரில் 30 பேர் முகாமிட்டு மோசடி போலி தேன் விற்கும் ஒடிசா கும்பல் அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

வேலூர், ஜன.24: வேலூரில் முகாமிட்டுள்ள ஒடிசா மாநில கும்பல், போலி தேனை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் வியாபாரத்துக்காக, வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்கள் சீசனுக்கு ஏற்ப பானிப்பூரி விற்பது, பஞ்சு மிட்டாய், குல்பி ஐஸ், சுவீட் கார்ன் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் குல்பி ஐஸ் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதற்கிடையில், ஒடிசாவில் இருந்து வேலூரில் முகாமிட்டுள்ள 30 பேர் கும்பல் போலி தேனை விற்பனை செய்து தினமும் பல ஆயிரங்களை மோசடியாக சம்பாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரும்பாலான மக்கள் இதுபோன்ற போலி தேனை வாங்கி ஏமாற்றமடைவதாக பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலும் போலி தேனை விற்பனை செய்பவர்கள், ஏற்கனவே சர்க்கரை பாகு பக்குவமாக காய்ச்சி தேன் எடுக்கும் பாத்திரத்தில் வைத்துவிடுகின்றனர். இந்த பாத்திரத்தில், அவர்கள் எடுத்த தேன் கூட்டினை போட்டு கிலோ ₹400 வரை விற்பனை செய்துவிடுகின்றனர். இதேபோல், நேற்று காட்பாடி அடுத்த கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் நுழைவில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் தேன் கூட்டை எடுத்த ஒடிசா கும்பல், ஒரு கிலோ தேன் ₹400 விலை நிர்ணயம் செய்தது. பின்னர், பொதுமக்கள் பேரம் பேசியதில் ₹300க்கு விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து விலை குறைத்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் தேனை வாங்கிவிட்டனர். ஆனால், சிறிய அளவிலான தேன் கூட்டை எடுத்தவர்கள் ஒரு மணி நேரத்தில் சுமார் 40 கிலோ தேனை விற்பனை செய்துவிட்டனர். இதுகுறித்து கேட்டபோது, நாளை(இன்று) அமாவாசை என்பதால் தேன் கொஞ்சம் கூட குறையாமல் முழுவதுமாக இருக்கும் என்று கூறி மக்களை நம்ப வைத்துவிட்டனர். இதேபோல், வேலூர் முழுவதும் பல்வேறு இடங்களில் 3 முதல் 4 பேர் வரை கும்பல் கும்பலாக பிரிந்து சென்று போலி தேனை விற்பனை செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு வேலூர் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்த வடமாநில கும்பல் ஒரு கிலோ தேனை ₹400 வரை விற்பனை செய்தது. இதை போட்டி போட்டு வாங்கிச் சென்ற அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தபோது, போலி தேன் என்று உறுதி செய்யப்பட்டது. இதுபோன்ற மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

வடமாநில கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வடமாநிலத்தவர்களின் சொந்த ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து நன்னடத்தை சான்று வாங்கி வந்து சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், வடமாநிலத்தவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கும்போது அவர்களை பணியில் அமர்த்தியவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும். ஆனால், வடமாநிலத்தவர்கள் இங்கு வந்து தங்குவது குறித்து முழுமையான தகவல்கள் போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. அதேபோல், வியாபார நோக்கில் தங்குபவர்கள் விவரங்களும் கிடையாது. இதனால், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வடமாநிலத்தவர்களை பிடிப்பதில் சிக்கல் உள்ளது. இதேபோல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் பாகாயம் அருகே பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவியை பின்ெதாடர்ந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர், மாணவியை பிளேடால் வெட்டினர். இதில் தொடர்புடையவர்களை இதுவரை பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Odisha ,gang officials ,Vellore ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை