பழமையான கட்டிடங்கள் நிலை குறித்து விரைவில் முடிவு வேலூர் கோட்டையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

வேலூர், ஜன.24: வேலூர் கோட்டையில் உள்ள பழமையான கட்டிடங்களின் நிலை குறித்து விரைவில் முடிவெடுக்கும் வகையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டை வெளியில் நீரூற்றுகளுடன் கூடிய பூங்கா, அகழி தூர்வாருதல், கோட்டைக்குள் நடை பயிற்சிக்கான பாதை, கேன்டீன், கழிவறை, குடிநீர் வசதி, இரவில் மின்னொளியில் காணும் வகையிலான கட்டமைப்பு, உள்ளே அமைந்துள்ள பழமையான கட்டிடங்களில் அவற்றின் தொன்மை மற்றும் வரலாற்று தகவல்களை கூறும் வகையில் மாற்றியமைத்தல் என பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது.

இதற்கிடையில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானங்களாக மாறியுள்ள சிம்மக்குளம், சந்திர குளங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வேலூர் மக்கள் வைத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மத்திய தொல்லியல்துறை பொறியாளர்கள் கோட்டைக்குள் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டு சென்றனர். தொடர்ந்து, நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி கலெக்டர் கணேஷ், தாசில்தார் சரவணமுத்து, மாநில அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் ஆகியோர் தாசில்தால் அலுவலகம் இயங்கிய கட்டிடம், கருவூலம் இயங்கிய கட்டிடம், எஸ்பிசிஐடி அலுவலகம் இயங்கிய கட்டிடம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கிய கட்டிடங்கள், கலெக்டர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் இயங்கிய கட்டிடங்களை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக தொல்லியல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ‘ஏற்கனவே திட்டமிட்டப்படி பழைய கட்டிடங்களை அவற்றின் தொன்மை, வரலாற்றை அறிய செய்யும் தகவல்களுடன் புனரமைத்து மக்களின் பார்வைக்கு விடுவது தொடர்பாகவும், மிகவும் மோசமான கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்குவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறி கொள்ளப்பட்டன’ என்றனர்.

Related Stories: