திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 ஒன்றியக்குழு தலைவர் உட்பட 24 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் வரும் 30ம் தேதி நடத்த ஏற்பாடு

திருவண்ணாமலை, ஜன.24: திருவண்ணாமலை மாவட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் உட்பட 24 பதவி இடங்களுக்கான மறைமுகத் தேர்தல் வரும் 30ம் ேததி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட, ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது. இதில், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் தேர்தலின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.அதேபோல், துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் வாக்கெடுப்பில் பங்கேற்க மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 10 பேர் மட்டுமே வந்திருந்தனர். 11 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும் என்ற நிலையில், போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், கலசபாக்கம், போளூர், புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் வாக்ெகடுப்பில் பங்கேற்க போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாத காரணங்களால் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், ஆனந்தல், கீழ்கச்சிராப்பட்டு, குருவிமலை, உச்சிமலைக்குப்பம், ேமல்கரிப்பூர், பெருங்களத்தூர், வடஆளப்பிறந்தான், காரணை, ஏழச்சேரி, அரசூர், தென்சாத்தமங்கலம், பாஞ்சரை, ஆயலவாடி, எஸ்.காட்டேரி, விநாயகபுரம், முருகமங்கலம், புங்கம்பாடி ஆகிய 17 கிராம ஊராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தலில் பங்கேற்க வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 24 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான மறைமுகத்தேர்தல் வரும் 30ம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ளார். மேலும், கடந்த 11ம் தேதி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பணியமர்த்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளே தற்போது தேர்தலை நடத்த உள்ளனர். ஒன்றியக்குழு தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கும், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் அன்று மாலை 3 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு, மறைமுகத் தேர்தலில் பங்கேற்க முறைப்படியான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Tags : district election ,Thiruvannamalai ,elections ,union committee leader ,
× RELATED கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரான...