×

திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவி கண்களை துணியால் கட்டிக்கொண்டு ஒரு கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி அசத்தல் உற்சாகப்படுத்திய கலெக்டர்

திருவண்ணாமலை, ஜன.24: திருவண்ணாமலையில், அரசுப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி கண்களை துணியால் கட்டிக்கொண்டு ஒரு கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை முயற்சியை மேற்கொண்டார். அவரை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உற்சாகப்படுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன், நெசவு ெதாழிலாளி. அவரது மகள் சுருதி(11). அதே கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கண்களை துணியால் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், எண்கள், நிறங்களை சொல்லுதல் என தனித்திறமை பெற்றுள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலையில் தன்னுடைய சாதனை முயற்சியை வெளிப்படுத்தினார். அதையொட்டி, மாணவி சுருதி இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி சாதனை செய்தார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வன், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி ஆகியோர், மாணவியுடன் சைக்கிளில் சென்று உற்சாகப்படுத்தினர்.

கண்களை திறந்த நிலையில் சைக்கிள் ஓட்டிச் செல்வதைப் போல, எந்தவித தடுமாற்றமும், பதற்றமும் இல்லாமல் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்ற மாணவி சுருதியின் திறமையைப் பார்த்து அனைவரும் வியந்தனர். மேலும், மாணவி சுருதி, தன்னுடைய கண்களை கட்டியபடி ஓவியங்களை வரைந்து, வண்ணம் தீட்டி அசத்தினார். அதேபோல், வண்ணங்கள், எண்கள், எழுத்துக்கள், ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, அதில் இடம் பெற்றுள்ள வரிசை எண்கள் ஆகியவற்றை தெளிவாக தெரிவித்து வியப்பில் ஆழ்த்தினார். இதுகுறித்து, மாணவி சுருதி கூறுகையில், `கடந்த ஒரு ஆண்டாக யோகா பயிற்சி பெற்று வருகிறேன். அதன்மூலம், இந்த சாதனைக்கான முயற்சியை மேற்கொண்டேன். கண்களை துணியால் கட்டிக்கொண்டாலும், உள்ளுணர்வு மற்றும் கண்களின் ஊடுகதிர் போன்ற திறனால் பொருட்களை அடையாளம் காண முடிகிறது. துணியால் கண்களை கட்டிக்கொண்டு, அதிகபட்சம் 60 கி.மீ. தூரம் வரை சைக்கிள் ஓட்டி சாதனை செய்ய திட்டமிட்டிருக்கிறேன். அதற்காக, இதுவரை 18 கி.மீ. வரை சைக்கிளில் சென்று பயிற்சி எடுத்திருக்கிறேன்’ என்றார்.

Tags : Thiruvannamalai ,Cycling Collector ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...